Advertisment

பாஜக பூத் கமிட்டி; பொறுப்பாளர் மீது சீனியர்கள் அதிருப்தி !

Kamalalayam

திராவிட கட்சிகளைப்போல சட்டமன்றத் தேர்தலை எதி்ர்கொள்வதற்கான தேர்தல் பணிகளைத் தொடங்கியிருக்கிறது தமிழக பாஜக. முதல் கட்டமாக பூத் கமிட்டி அமைத்தல், அதன் பணிகள் ஆகியவைகள் குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு  சென்னை காட்டாங்குளத்தூரில் ஆலோசனைக் கூட்டத்தை பாஜகவினர் நடத்தினர்.

Advertisment

தமிழகம் முழுவதற்குமான பூத் கமிட்டியின் பொறுப்பாளர் ஜே.பி. என்கிற ஜெயப்பிரகாஷ் என்பவரின் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில், பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஆனால், ஜே.பி. தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டதில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். இந்த விவகாரம், தற்போது தமிழக பாஜக-வில் ஏகத்துக்கும் உள்கட்சிப் பூசல்களை வெடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இது குறித்து தமிழக பாஜகவில் விசாரித்தபோது, அரசியல் அனுபவம், தேர்தல் அனுபவம் இல்லாத ஒருவரான ஜெயப்பிரகாஷை, பூத் கமிட்டி பொறுப்பாளராக நியமித்ததே முதல் தவறு. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மதுசூதனின் அக்காள் மகன் தான் இந்த ஜெயக்குமார். மதுசூதனின் அமைச்சர் பதவியை ஜெயலலிதா அன்றைய காலகட்டத்தில் பறித்ததற்கும், மீண்டும் தேர்தலில் மதுசூதனன் போட்டியிட சீட் ஒதுக்கப்படாமல் போனதற்கும் ஜெ.பி.யின் தில்லுமுல்லுகள் தான் காரணமாக இருந்தன. இதனால் ஜெயலலிதா இருந்த போதும், மறைந்தப் பிறகும் அதிமுகவில் எந்த முக்கியத்துவமும் ஜே.பி.க்கு கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், 2019-ல் நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவில் சீட் கேட்டார் ஜெயப்பிரகாஷ். சீட் கேட்டு விருப்ப மனுவும் கொடுத்தார். ஆனால், அவருக்கு சீட் தர திமுக தலைவர் மறுத்து விட்டார். இதற்கும் பல்வேறு காரணங்கள் உண்டு . அரசியலுக்கும் இவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத சூழலில்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்தார்.  அவரை நம்பித்தான் 2026 தேர்தலை சந்திக்க அவருக்கு பூத் கமிட்டி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

bjp jp

தமிழிசை, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சீனியர்கள் பலரும் இந்த நியமனத்தை ஆதரிக்கவில்லை. எந்த அனுபவமும் இல்லாத இவரைக் கொண்டு பூத் கமிட்டியின் பணிகளை எப்படி ஆய்வு செய்ய முடியும்? அவர்களுக்குத் தேவையான உத்தரவுகளை எப்படி பிறப்பிக்க முடியும் ? இவரது வழிகாட்டுதலில் தேர்தலை எப்படி எதிர்கொள்ள முடியும் ? என்றெல்லாம் சீனியர்கள் அதிர்ப்தியடைந்திருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் ப.சி.யின் மனைவி நளினி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்த  சொத்தினை பெரிய தொகை கொடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயப்பிரகாஷ் சீக்ரெட்டாக வாங்கினார்.  இதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதை அறிந்த வருமானவரித்துறை, ஜே.பி. தொடர்புள்ள இடங்களில் ரெய்டு நடத்தியது. இதனை அடுத்து, பல கோடி ரூபாய் ஃபைன் கட்டினார் ஜே.பி. அப்படிப்பட்ட நபரைத்தான், பாஜகவின் பூத் கமிட்டி பொறுப்பாளராக நியமித்திருக்கின்றனர். 

ஜே.பி.க்கு எதிராக இப்படிப்பட்ட புகார்களும் அதிருப்திகளும் வெடித்த சூழலில்தான்,  அவர் தலைமையில் காட்டாங்கொளத்தூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பூத்துகளை வலிமைப்படுத்தும் பயணம் என ஒரு விண்ணப்பத்தை கொடுக்க வைத்தார் ஜே.பி. அதில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தரவுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அந்த கேள்விகளுக்கு ஒரு சர்வே போல பதில் எடுத்து தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு நபருக்கு 3 பூத்துகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதில் கேட்கப்பட்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் பெறுவது கஷ்டம். யாரும் பதில் சொல்லமாட்டார்கள்.  வடசென்னையைச் சேர்ந்த பாஜகவினரை மதுரைக்கு அனுப்பி வைக்கிறார்கள். சென்னையை சேர்ந்தவர்களுக்கு மதுரையில் உள்ள பூத் நிலவரம் எப்படி தெரியும் ? பூத்தின் கிழக்கு, மேற்கு கூட தெரியாது என நிர்வாகிகள் புலம்புகின்றனர். இது மாதிரி ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள பாஜகவினரை வெவ்வேறு மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். வருகிற 13,14,15 ஆகிய 3 நாட்களும் இந்த பயணத்தில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  திக்கும் தெரியாமல் திசையும் தெரியாமல் எப்படி இந்த பயணத்தை மேற்கொள்வது என நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர் என்று தமிழக பாஜகவினர் சுட்டிக்காட்டுகிறார்கள்

BJP LEADERS b.j.p
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe