BJP appoints in-charges for Tamil Nadu election
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.
இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பா.ஜ.கவில் 2 மேலிட பொறுப்பாளர்களை பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். அதன்படி, பா.ஜ.க தேசிய துணைத் தலைவரும், எம்.பியுமான வைஜயந்த் பாண்டா பொறுப்பாளராகவும் மத்திய இணையமைச்சர் முரளிதர் மொகல் இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Follow Us