கேரளாவில் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த 13ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதில் காங்கிரஸ், இடதுசாரி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றது. இடதுசாரி கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் பாஜகவும் தங்களால் முடிந்த அளவிலான வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் திருவனந்தபுரம் மாநகராட்சியை முதன் முறையாக பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது . 

Advertisment

கடந்த 45 ஆண்டுகளாக இடதுசாரி கூட்டணிகளின் கட்டுப்பாட்டில் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சி, தற்போது பாஜகவின் கைவசம் வந்துள்ளது. மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடந்துள்ள நிலையில் பாஜக கூட்டணி 50 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 29 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களிலும் வெற்றிபெற்றன. இந்த நிலையில் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களை பாஜக கூட்டணிஅறிவித்துள்ளது. அதன்படி விவி ராஜேஷ் மேயர் வேட்பாளராகவும், பெண் கவுன்சிலர் ஆஷா நாத் துணை மேயராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

Advertisment

திருவனந்தபுரம் மாவட்ட தலைவராக இருந்த விவி ராஜேஷ், தற்போது பாஜகவின் மாநில செயலாளராக உள்ளார்.  அதோடு, பல்வேறு அமைப்பு சார்ந்த பொறுப்புகளையும் வகித்த அனுபுவம் கொண்டவர். கொடூங்கனூர் வார்டில் 2வது முறையாக வெற்றிபெறுள்ள விவி ராஜேஷ், கடந்த முறை மாநகராட்சியில் எதிர்க்கட்சி கவுன்சிலராக சிறப்பாக செயல்பட்டார். இதனால் தற்போது அவருக்கு மேயர் பதவியை பாஜக வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. 

kl-local-body-2-voting
கோப்புப்படம்

துணை மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆஷா நாத், பாபனாம்கோட் வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உள்ளாட்சி தேர்தலில், 3வது முறையாக கவுன்சிலராக ஆஷா நாத் வெற்றி பெற்றுள்ளார். பாஜக சார்பில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வென்ற கவுன்சிலர்களின் ஆலோசனை கூட்டம் இன்று (26.12.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment