மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த ஆண்டு நடைபெற்ற 2024 சட்டமன்ற தேர்தலில்  பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பாஜக,  இந்த தேர்தலில் 288 இடங்களில் போட்டியிட்டு 235 இடங்களை கைப்பற்றியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து மராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார். தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இக்கூட்டணி கட்சிகளுக்குள் அவ்வப்போது சில கருத்து முரண்பாடுகள் மற்றும் சலசலப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை எல்லாம் கடந்து தற்போது இந்த ஆட்சி சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில் தற்போது மஹாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 286 நகராட்சி கவுன்சில் மற்றும் 42 நகர் பஞ்சாயத்துக்கு டிசம்பர் 2 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலில், பா.ஜ.க கூட்டணி பெருவாரியான இடங்களைப் பெற்று அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. முதற்கட்டமாக டிசம்பர் 2ஆம் தேதியன்று  246 நகராட்சி கவுன்சில் மற்றும் 42 நகராட்சி பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் அந்த பகுதிகளுக்கு டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதனை தொடர்ந்து டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டமாக மீதமுள்ள நகராட்சி கவுன்சில், நகர பஞ்சாயத்து, பிற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 154 வார்டுகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலின் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று (21-12-25) நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் பா.ஜ.க, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி 207 நகராட்சி கவுன்சில்களில் வெற்றி பெற்றது. குறிப்பாக பா.ஜ.க 117 இடங்களிலும், ஷிண்டேவின் சிவசேனா 53 இடங்களிலும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா சரத் பவாரின் சரத் சந்திர தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி இந்த தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் 28 நகராட்சி கவுன்சில்களையும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 7 நகராட்சி கவுன்சில்களையும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9 நகராட்சி கவுன்சில்களையும் பெற்றுள்ளது. இந்த தேர்தலில், அதிக நகராட்சி கவுன்சில்களைப் பெற்று பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 

Advertisment