திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி (12.07.2025) சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சுமார் 13 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்று (25.07.2025) மாலை 4 மணி அளவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டான். விசாரணை இறுதியில் கைது செய்யப்பட்டவர் டெல்லியை சேர்ந்த ராஜு பிஸ்வ கர்மா(25) என்பது தெரியவந்தது.

பின்னர் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜு பிஸ்வ கர்மா அதன் பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டான். ராஜு பிஸ்வ கர்மாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ராஜூவை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு வேறு ஒரு இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகவும் அந்த பெண் அவரை துரத்தி விட்டதால் ராஜு பிஸ்வ கர்மா சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

கடந்த 12ஆம் தேதி சூலூர் பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்வதற்காக ராஜு பிஸ்வ கர்மா சென்றுள்ளான். அப்பொழுது அவன் வைத்திருந்த 1,500 ரூபாய் பணத்தில் 500 ரூபாய் மர்மநபர் ஒருவர் அடித்து பிடுங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து பயணம் செய்த ராஜு பிஸ்வ கர்மா ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளான். அப்போது அந்த வழியாக வந்த கர்ப்பிணி பெண் ஒருவரை பின் தொடர்ந்து சென்றுள்ளான். இதனையறிந்த அந்த கர்ப்பிணிப் பெண் அவனை திட்டி துரத்தி விட்டதாகத் தெரிகிறது. பின்னர் அதே இடத்தில் நின்று கொண்டிருந்த ராஜு பிஸ்வ கர்மா அந்த பெண் திரும்பவும் வந்தால் மடக்கி பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் மாந்தோப்பு பகுதியில் நோட்டமிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

பின்னர் பெட்டிக்கடை அருகே ராஜு பிஸ்வ கர்மா நின்று கொண்டிருந்த பொழுது அதேபகுதியில் சிறுமி ஒருவர் தண்டவாளத்தை கடந்து வீட்டிற்கு சென்று  கொண்டிருந்தார். அப்பொழுது சிறுமியை முன்னாள் போக விட்டு பின்னால் சென்ற பிஸ்வ கர்மா சிறுமியை மாந்தோப்புக்கு தூக்கிச் சென்று கழுத்தில் கத்தியை வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அப்பொழுது மொபைலில்  வந்த அழைப்பை கட் செய்த ராஜு பிஸ்வ கர்மா, மீண்டும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது.

உயிர் பிழைத்தால் போதும் என ரத்த காயத்துடன் தப்பி ஓடிய சிறுமி இதுகுறித்து அவருடைய பாட்டியிடம் தெரிவிக்க இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கிருந்து ஓடிய பிஸ்வ கர்மா தான் பணியாற்றி வரும் தாபா ஹோட்டலுக்கு சென்று ரத்தக்கறை படிந்த பனியன் மற்றும் கால் சட்டையை துவைத்து போட்டு காயவைத்துவிட்டு உள்ளேயே இருந்துள்ளான். 12 நாட்களுக்குப் பிறகு தன்னுடைய போன் வேலை செய்யவில்லை என சரி செய்வதற்காக அதே ஆடையை அணிந்து கொண்டு தன்னுடைய செல்போனை சரி செய்வதற்காக சூலூர் பேட்டை ரயில்வே நிலையத்திற்கு வந்த பொழுது தன்னுடைய படம் ரயில் நிலையத்தில் ஒட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ந்து தன்னுடைய செல்போன் சிம் கார்டை உடைத்துப் போட்டுள்ளான். அதன் பின்னரே தனிப்படை போலீசார் ராஜூ பிஸ்வ கர்மாவை சுற்றி வளைத்து  கைது செய்தது தெரியவந்துள்ளது.