தேனி, பெரியகுளம் சாலையில் இயங்கி வரும் ஆசிப் பிரியாணி கடையின் மேலாளர் செந்தில், மூன்று இளைஞர்களை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மனித கழிவு நிறைந்த சாக்கடையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. கடையில் ஏற்பட்ட கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய, செந்தில், வெங்கடேஷ், அய்யனார், ஜெகதீஷ் ஆகிய மூன்று இளைஞர்களை வேலைக்கு அழைத்துச் சென்றார்.
முதலில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை இளைஞர்கள் சரிசெய்தனர். ஆனால், பின்னர் மனித கழிவு நிறைந்த சாக்கடையை சுத்தம் செய்யுமாறு செந்தில் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிவித்தபோது, செந்தில், "பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடையை சுத்தம் செய்யாவிட்டால் சம்பளம் வழங்கப்படாது" என மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், வேறு வழியின்றி மூன்று இளைஞர்களும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை உயிருக்கு ஆபத்தான நிலையில் சாக்கடையை சுத்தம் செய்தனர். இதையடுத்து, ஆசிப் பிரியாணி கடை மேலாளர் செந்தில் மற்றும் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேகா பிரியாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.