திருப்பூரைச் சேர்ந்த அன்னபூரணி என்ற அன்னக்கிளி பாட்டியின் 100வது பிறந்தநாள் விழா, அவரது 13 மகன் மகள்கள் மற்றும் 97 பேரன் பேத்திகள் இணைந்து பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்று கூடி, குடும்ப உறவுகளின் மேன்மையை வெளிப்படுத்தினர்.
அன்னக்கிளி பாட்டி, 12 வயதில் கிருஷ்ணசாமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 6 மகன்கள் மற்றும் 7 மகள்கள் என மொத்தம் 13 குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் மூலம் ஐந்து தலைமுறைகளைக் கண்ட அன்னக்கிளி பாட்டி, தனது 100வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இதனை முன்னிட்டு, அவரது பேரன் பேத்திகள் இணைந்து ஒரு தனியார் மண்டபத்தில் குடும்ப சங்கம விழாவை ஏற்பாடு செய்தனர்.
நிகழ்வில், அனைவரும் ஒரே மாதிரியான உடைகள் அணிந்து குடும்ப புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, பாட்டியிடம் ஆசி பெற்றனர். மேலும், பாட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து, குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பாடல்களுக்கு ஏற்றார் போல் ஆடி பாடி , தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வு குறித்து அன்னக்கிளி பாட்டியிடம் கேட்டபோது, “ஐந்து தலைமுறை பேரன் பேத்திகளுடன் 100வது பிறந்தநாளைக் கொண்டாடுவது எனது பாக்கியம். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்று தெரிவித்தார். மேலும், அந்தக் காலத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற உணவுகள் உண்டதாகவும், இந்தக் காலத்தில் அவை கிடைப்பது அரிதாக உள்ளதாகவும் கூறினார். தான், அசைவ உணவை விரும்பி உண்பதாகவும், வாரத்தில் மூன்று நாட்கள் அசைவ உணவு சாப்பிடுவதாகவும் தெரிவித்தார்.
அவரது குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து யாரேனும் கேட்டால், “13 குழந்தைகள் என்று சொன்னால் கண் பட்டுவிடும்,” என்பதால் அதை வெளிப்படையாகக் கூறுவதில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பேரன் பேத்திகள் கூறுகையில், “இந்த விழா எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. 13வது குழந்தை பிறந்த பின்னர் தாத்தா கிருஷ்ணசாமி இறந்துவிட்டார். இல்லையெனில், அவர்கள்16 பெற்று மகிழ்ச்சியாக பெரு வாழ்வு வாழ்ந்திருப்பார்கள்,” என்றனர். மேலும், “பணத்தை நோக்கி ஓடினாலும், உறவுகளை மதிக்க வேண்டும், அவற்றைக் கொண்டாட வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கம்,” எனத் தெரிவித்தனர்.