கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஊரணி தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி காளீஸ்வரி. காளீஸ்வரியின் தந்தை துரைகண்ணன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள் பெயருக்கு சொத்தை எழுதி வைத்துள்ளார். அதன்படி, காளீஸ்வரி பெயரில் உள்ள வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய, செல்வகுமார் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தைத் அனுகியுள்ளார்.
அப்போது நகராட்சியில் பில் கலெக்டராக பணிபுரியும் 29 வயது நவீனா, பெயர் மாற்றத்திற்காக 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. முதல் கட்டமாக 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார், தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி பீட்டர் பால் துரை தலைமையில், இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் தளவாய், சுந்தரவேல், பாண்டி, கோமதி, முத்து, ஷியாம் ஆகியோர் அடங்கிய குழு, கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மறைந்திருந்து கண்காணித்தது. செல்வகுமாரிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழங்கிய, ரசாயனப் பொடி தடவப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளைக் கொண்ட 10,000 ரூபாயை, நவீனா நகராட்சி அலுவலகத்தின் வருவாய் பிரிவு அறையில் வைத்து பெற்றபோது, காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
விசாரணையின்போது, பில் கலெக்டர் நவீனா கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். டிஎஸ்பி பீட்டர் பால் துரை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், நவீனாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் ஒழிப்பு பற்றி நெடுங்காலமாக பேசப்பட்டு வருகிறது, ஆனால் இந்தப் பிரச்சினை முழுமையாக ஒழியவில்லை என்பது கவலை அளிக்கிறது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி