ஆந்திரப் பிரதேசத்தில் கர்னூல் பகுதியில் நேற்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து 20க்கும் மேற்பட்ட பலியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் பெங்களூருவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம் கர்னூல் 44 வது தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அதிகாலை 3:30 மணியளவில் விபத்துக்குள்ளானது. பேருந்து தனது முன்னே சென்ற இருச்சக்கர வாகனத்தின் மீது மோதியதில் அதனை ஓட்டி வந்த நபர் தூக்கி வீசப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். அதே சமயம் அந்த இருச்சக்கர வாகனம் பேருந்தின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டது.

Advertisment

இதனைக் கவனிக்காத பேருந்து ஓட்டுநர், தொடர்ந்து பேருந்தை இயக்கி வந்துள்ளார். பேருந்தின் நடுவில் இருச்சக்கர வாகனம் சிக்கிக் கொண்டதில் தீப்பொறி ஏற்பட்டிருக்கிறது. பின்னர், அது பேருந்தின் டீசல் டேங்கிலும் பற்றி மளமளவென பேருந்து முழுவதும் பரவியிருக்கிறது. அதிகாலையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகளில் லோவர் பெர்த்தில் இருந்த பயணிகள் மட்டும் உடனடியாகப் பேருந்திலிருந்து வெளியேறி உயிர் பிழைத்தனர். சிலர் அவசரகாலக் கதவுகளின் மூலமும் வெளியேறினர். ஆனால் அப்பர் பெர்த்தில் பயணித்த நபர்கள் கீழே இறங்குவதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதனால் 25  பயணிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisment

இந்த நிலையில், தனியார் பேருந்து மீது மோதிய இருசக்கர வாகனத்தின் ஓட்டுநர் சிவசங்கர் என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். எரிபொருள் மூடி திறந்திருந்த மோட்டார் சைக்கிள், பேருந்து அடியில் இழுத்துச் செல்லப்பட்டதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

இதனிடையே, தீ விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிவ சங்கர் என்ற நபர் மதுபோதையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படும் சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி அதிகாலை 2:23 மணியளவில் ஒரு பெட்ரோல் பங்கில் பதிவு செய்யப்பட்ட அந்த சிசிடிவி வீடியோ காட்சியில், சிவ சங்கர் தனது இருசக்கர வாகனத்தை எரிபொருள் விநியோகிக்கும் ஒரு இடத்திற்கு அருகில் நிறுத்துகிறார். அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒரு நபர் கீழே இறங்கியவுடன், சிவ சங்கரும் இறங்கி சுற்றிப் பார்க்கின்றனர். சில வினாடிகள் கழித்து, சிவ சங்கர் மட்டும் தனியாக வந்து தனது இருசக்கர வாகனத்தை வேகமாக திருப்பி நிலையற்ற நிலையில் ஓட்டிச் செல்வதை வீடியோவில் தெரிகிறது. சிவ சங்கர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

Advertisment