புதுக்கோட்டை நகர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட பல இடங்களிலும் அடிக்கடி பைக் திருட்டுகள் அதிகமாக நடந்தது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தவர்களை பார்க்க வரும் உறவினர்களின் பல பைக்குகள் காணாமல் போனது. இப்படி ஏராளமான பைக் திருட்டு புகார்கள் வந்து கொண்டிருந்தது. கணேஷ்நகர் காவல் நிலையத்தில் மட்டும் அடுத்தடுத்து 4 புகார்கள் பதிவானது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை நகரை சுற்றி தொடர்ந்து பைக்குகள் திருடப்படுவதை கண்டறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை டி.எஸ்.பி பிருந்தா மேற்பார்வையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, சேதுராமன், மற்றும் காவலர்கள் மணிகண்டன், ரகுநாதன் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், ஆங்காங்கே பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதில் காணாமல் போன பைக்களில் செல்லும் நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் எங்கே பதுங்கி உள்ளனர் என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து, அடையாளம் காணப்பட்ட முள்ளூர் ராசாப்பட்டி சுப்பிரமணி மகன் சுள்ளான் (எ) விக்ரம் (21), புத்தாம்பூர் குறிச்சிப்பட்டி பழனிச்சாமி மகன் முத்துமணிப்பாண்டி (21) ஆகிய இருவரை கைது செய்து விசாரனை செய்தனர்.
அதில், ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைதாகி உள்ள ராசாப்பட்டி மேலத்தெரு முத்துக்குமார் மகன் தயாநிதி (21) என்பவர் இவர்களுடன் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 15 திருட்டு பைக்குகளையும் மீட்டனர். தொடர்ந்து நடந்த விசாரனையில், ஏற்கனவே மருத்துவக்கல்லூரி சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களை தாக்கி பணம், பைக்குகளை பறித்துச் சென்ற குற்றச் சம்பவங்ளில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/20/bike-2026-01-20-07-59-52.jpg)
அதை தொடர்ந்து அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், ‘பைக்குகளை பார்த்து எடுக்க முடிவு செய்தால் கொஞ்சம் நேரம் நோட்டம் பார்த்து பைக் அருகே சென்று சைடு லாக் பூட்டை உடைத்து பைக்கை எடுத்துட்டு போய் மெடிக்கல் காலேஜ் பக்கத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து நம்பர் பிளேட்களை கழற்றிவிட்டு சேஸ், எஞ்சின் நம்பர்களை அழித்துவிட்டு புதுக்கோட்டை டவுனில் ஒருத்தரிடம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரத்திற்கு கொடுத்துட்டு அந்தப் பணத்தில் பிராயாணி சாப்பிட்டு போதை ஊசி, மாத்திரைகளை வாங்கி வந்துடுவோம். மாற்றுப் போதைக்காக அடிமையான நாங்க அந்த போதையிலேயே திருடப் போவோம். அந்த போதை தெளிஞ்சதும் தூக்கம் வராது அதுக்கு சில மாத்திரைகளை வாங்கி போடுவோம்’ என்று கூறி போலீசாரை கிறுகிறுக்க வைத்துள்ளனர்.
கஞ்சா, ஊசி, மாத்திரை போன்ற மாற்றுப் போதைக்கு அடிமையான இளைஞர்கள், போதைப் பொருள் வாங்க திருடிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என்கின்றனர் போலீசார். மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடத்தைகளை கண்காணித்து உடனுக்குடன் திருத்தவில்லை என்றால் இது போல பெரிய திருடர்களாகி குடும்ப பெயரையும் கெடுத்துவிடுவார்கள் என்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/20/biketh-2026-01-20-07-59-30.jpg)