டெல்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தில் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார், பீகார் காவல்துறையுடன் இணைந்து, இன்று (23.10.2025)அதிகாலை 02:20 மணியளவில் ரவுடி கும்பல் மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது. இதில் பீகாரின் பிரபல ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்த ரவுடி கும்பல் ஒரு பெரிய குற்றச் செயலைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு மற்றும் பீகார் காவல்துறையின் கூட்டுக் குழுவினர் ரவுடி கும்பல் மீது எண்கவுண்டர் நடத்தப்பட்டது.
இந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரும் பீகாரில் பல கொலைகள் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளைகள் உட்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள முதற்கட்ட தகவலின்படி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜன் பாட்ட கேங் என அழைக்கப்படும் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் பதுங்கி இருப்பதாக பீகார் போலீசார் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் பேரில் பீகார் போலீசை சேர்ந்த ஒரு குழு மற்றும் டெல்லி போலீசை சேர்ந்த ஒரு குழுவினர் டெல்லியில் பதுங்கி இருந்த ரவுடிகளை பிடிப்பதற்காக நேற்று இரவு ரோகிணி பகுதியில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது போலீசார் அந்த கும்பலை சூழ்ந்த போது அவர்கள் போலீசாரை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த என்கவுண்டர் சம்பவத்தில் ராஜன் பாட்டக் (வயது 25) , விமிலேஷ் மாட்டோ (வயது 25), மனீஷ் பாட்டக் (வயது 33) மற்றும் அமன் தாக்கூர் (வயது 21) ஆகிய 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பீகார் மாநில ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.