பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிண்டு பர்ன்வால். இவர் முதல்  மற்றும் இரண்டாவது மனைவிகளை விவாகரத்து செய்யாமல் மூன்றாவதாக ஒரு பெண்ணைத்  திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு மனைவிகளும், தங்களை விவாகரத்து செய்யாமல் வேறு திருமணம் செய்து கொண்டதாகவும், மேலும் தங்களை பாலியல் வன்கொடுமை செய்தல், வரதட்சணைக் கொடுமை மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்துதல் போன்ற காரணங்களைக் காட்டி அவர் மீது புகார் கொடுத்துள்ளனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து கணவன் மற்றும் மனைவிகள் செய்தியாளர்களிடம் தங்கள் தரப்பு நியாயங்களையும், எதிர் தரப்பு மீதான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தனர். முதல் மனைவி குஷ்பூ குமாரி கூறுகையில், ‘டிசம்பர் 2, 2022 அன்று எங்களுக்கு திருமணம் நடந்தது, பிண்டுவின் வற்புறுத்தல் காரணமாக எனது குடும்பத்தினர் 3 லட்சம் ரூபாய், நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைக் கொடுத்தனர். அவர் என்னை அடித்து, சித்திரவதை செய்து, வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டார். என்னை விவாகரத்து செய்யாமலேயே இரண்டு திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவிக்கு 10 மாதக் குழந்தையும், மூன்றாவது மனைவிக்கு ஒரு மாதக் குழந்தையும் இருக்கிறது ’ என்று கூறினார்.

Advertisment

இரண்டாவது மனைவி குடியா குமாரி கூறுகையில், பிண்டு தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதாகவும், தனக்குத் தெரிவிக்காமல் மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, தன்னைக்  கைவிட்டுவிட்டதாகவும் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் பிண்டுவின் இரண்டாவது மனைவி. என்னை மணந்த பிறகு, எனக்குத் தெரியாமலும், என்னை விவாகரத்து செய்யாமலும் அவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்” என்று கூறினார்.  

தொடர்ந்து பேசிய பிண்டு பர்ன்வால், தங்கள் மனைவிகள் கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்ட பிண்டு, தன்னுடைய இந்த முடிவிற்கு சூழ்நிலைகளே காரணம் என்று கூறினார். மேலும் தான் ஒரு ரூபாய் கூட வரதட்சணை பெறவில்லை என்றும் அவர்கள் என்னையும் எனது 60 வயதான தாயாரையும் கவனித்துக்கொள்ளவில்லை என்றும் கூறினார். மேலும் அவர்கள் எனக்கும்,  எனது தாயாருக்கும் உணவளிக்கவில்லை என்றும் மாறாக நாங்கள் தான் அவருக்கு உணவளித்தோம் என்றும் குற்றம் சாட்டினார்.

Advertisment

ஆனால், முதல் மற்றும் இரண்டாவது மனைவி ஆகிய இருவரும் கணவரின் இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளனர். மேலும் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பணத்திற்காக திருமணம் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டினர். அவர் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகவும், அதனால் அவருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறிய அவர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து இரண்டு பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் பிண்டுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.