பீகார் மாநிலம், சுபௌல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயதான ராகுல் குமார். இவர், தர்பங்கா மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் தானுப்ரியா என்ற இளம்பெண் பி.எஸ்.சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியிருக்கிறது. ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தானுப்ரியாவின் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தானுப்ரியா எவ்வளவோ பேசிப் பார்த்தும், அவரது தந்தை பிரேம்சங்கர் ஜா காதலை ஏற்க மறுத்திருக்கிறார்.

இந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, தானுப்ரியா கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காதலர் ராகுல் குமாரை சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு, மருத்துவக் கல்லூரி விடுதியில் வெவ்வேறு அறைகளில் தங்கி, இருவரும் தங்களது படிப்பைத் தொடர்ந்து வந்துள்ளனர். இதனிடையே,  கடும் கோபத்தில் இருந்த தானுப்ரியாவின் தந்தை பிரேம்சங்கர் ஜா, ஆகஸ்ட் 6-ஆம் தேதி தர்பங்கா மருத்துவக் கல்லூரிக்கு வந்திருக்கிறார். தனது தோற்றத்தை மறைத்து, தலையில் தொப்பி அணிந்து வந்த அவர், ராகுல் குமாரைப் பேச அழைத்துள்ளார். முதலில் வேறு யாரோ ஒருவர் தான் அழைக்கிறார் என்று வந்த ராகுல் குமார், நெருங்கி வந்து பார்த்தபோது தான் அது பிரேம்சங்கர் ஜா என்பது தெரியவந்திருக்கிறது. பின்னர், ராகுல் குமார் சுதாரிப்பதற்குள், கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அவரது நெஞ்சில் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், ராகுல் குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்திருக்கிறார். இதனை நேரில் பார்த்து ஓடி வந்து தானுப்ரியா, ராகுலை தூக்கியபோது, அவரது மடையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்த சக மாணவர்கள், பிரேம்சங்கர் ஜாவைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவர்களிடமிருந்து பிரேம்சங்கர் ஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இந்த சம்பவத்தைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் மருத்துவமனையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்ய முயன்றபோது, காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக மாறியது. அதன்பின்னர், தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து, காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து, ராகுல் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த  போலீசார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது கண் முன்னே ராகுலைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக,  தந்தைக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துள்ள ராகுல் தனது மடியில் தான்  இறுதி மூச்சை விட்டார் என்று கண்ணீர் மல்கக் கதறி அழுதுள்ளார். மேலும், திருமணம் செய்து கொண்டபோதே, அண்ணன் மற்றும் தந்தையின் மூலம் தங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று புகார் கொடுத்தேன். ஆனால், காவல்துறையினர் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதனாலேயே இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது என்று தானுப்ரியா குற்றம் சாட்டியிருக்கிறார்.

Advertisment

பீகார் மாநில சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த ஆணவக் கொலை மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஏற்கனவே பீகாரில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டதாகக் கூறி, நிதிஷ் குமாரின் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், தற்போது இந்தச் சம்பவம் மேலும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.