வாக்கு திருட்டு நடந்துள்ளதாகவும், பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஒருபுறம் வைத்து வரும் நிலையில் மறுபுறம் தேர்தல் ஆணையம் ராகுலின் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் பிஹார் சட்டமன்ற தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாகியுள்ளது.
மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலத்தின் சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதை அடுத்துத் தேர்தல் தேதி இன்று (06/10/2025) அறிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்புகளை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வெளியிட்டு வருகிறார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி ஞானேஷ்குமார் பேசுகையில், 'பிஹார் தேர்தல் அமைதியான மற்றும் வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படும். பிஹார் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 13ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். அக்.20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். அக்டோபர் 21ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். நவம்பர் 6 மற்றும் 11ம் தேதி என இரண்டு கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்' என அறிவித்துள்ளார்.