Bihar Elections - Final NDA Seat Share Photograph: (bihaar)
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபை பதவிக்காலம் வரும் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதை அடுத்து அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, 243 தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதி என இரண்டு கட்டமாக அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய மகாபந்தன் கூட்டணி மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.
பீகார் தேர்தல் தொடர்பான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என்டிஏ கூட்டணியில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், அதேபோல் கூட்டணியில் உள்ள சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 29 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஷ்டிரிய லோக் மோர்ச்சா, ஹிந்துஸ்தான் அவாம் மோர்சாவுக்கு தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பாஜக தேசியத் தலைவர் நட்டா தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த தொகுதிப் பங்கீட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தர்மேந்திர பிரதான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.