நெருங்கும் பீகார் தேர்தல்; கணக்கு போட்டு அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிடும் நிதிஷ் குமார்!

nitish-kumar

Bihar elections approaching and Nitish Kumar to make a series of announcements

பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் உள்ளன. இம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். ஒருபுறம், மாநில அரசின் மீதுள்ள அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்ய தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம், தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.கவுடன் இணைந்து நிற்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில், பெண்களை கவருவதற்காக அம்மாநில பெண்களுக்கு அரசுப் பணியில் 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஏற்கெனவே பீகாரில் மதுவுக்குத் தடை உள்ளிட்ட காரணங்களால் பெண்களின் ஆதரவு நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அதிகம் இருந்து வரும் சூழலில், பெண்களுக்கு அரசுப் பணியில் 35% இடஒதுக்கீடு எனும் அறிவிப்பு பெண்களின் வாக்கை கவருவதற்கு இன்னும் வலுசேர்க்கும் என்று சொல்லப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 1 முதல் அனைத்து வீடுகளுக்கு மாதந்தோறும் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்தார். ஜூலை மாத மின் கட்டணத்தில் நுகர்வோர்கள் 125 யூனிட் வரையிலான மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், இதன் மூலம், மாநிலத்தில் உள்ள 1 கோடியே 67 லட்சம் குடும்பங்கள் பயணடையும் எனவும் தெரிவித்திருந்தார்.

தேர்தல்களையொட்டி அறிவிக்கப்படும் இலவசங்கள் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வரும் முதல்வர் நிதிஷ் குமார், இந்த தேர்தலையொட்டி இலவச மின்சாரம், பெண்களுக்கு இடஒதுக்கீடு என அறிவித்து வருவது பீகார் மாநில அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நியமிக்கப்பட்ட சமையல்காரர்கள், இரவு காவலர்கள், மற்றும் உடற்கல்வி மற்றும் சுகாதார பயிற்றுனர்களுக்கான கெளரவ ஊதியத்தை இருமடங்கு அதிகரிப்பதாக நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “2005ஆம் ஆண்டு நவம்பரில் அரசு அமைக்கப்பட்டதில் இருந்து கல்வி முறையை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். 2005ஆம் ஆண்டில் மொத்த கல்வி பட்ஜெட் ரூ.4,366 கோடியாக இருப்பது, இப்போது ரூ.77,690 கோடியாக அதிகரித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களை நியமித்தல், புதிய பள்ளி கட்டிடங்களை கட்டுதல், அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் என கல்வி முறையை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமையல்காரர்கள், இரவு காவலர்கள் மற்றும் உடற்கல்வி மற்றும் சுகாதார பயிற்றுனர்கள் கல்வி முறையை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதை மனதில் கொண்டு, அவர்களின் கௌரவ ஊதியத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளோம்.

அதன்படி, மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சமையல்காரர்களின் மாதாந்திர கெளரவு ஊதியம் ரூ.1,650 இருந்து ரூ.3,300 ஆக உயர்த்தப்படும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இரவு காவலர்களுக்கு ரூ.5,000 இருந்து மாதத்திற்கு ரூ.10,000 ஆக வழங்கப்படும். இதேபோல் உடற்கல்வி மற்றும் சுகாதார பயிற்றுனர்களின் கெளரவ ஊதியம் ரூ.8,000 இருந்து ரூ.16,000 ஆக வழங்கப்படும். மேலும், இவர்களின் ஆண்டு சம்பள உயர்வு ரூ.200 இருந்து ரூ.400ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது பணிபுரியும் பணியாளர்களின் மன உறுதியை அதிகரிக்கும். மேலும் அவர்கள் அதிக உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் தங்கள் கடமைகளைச் செய்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

Announcement Bihar Nitish kumar
இதையும் படியுங்கள்
Subscribe