பீகார் மாநிலத்தில், வரும் நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று நவம்பர் 14ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 

Advertisment

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கை பாட்னாவில் இன்று (31.10.2025) வெளியிடப்பட்டுள்ளது. பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில் முக்கிய கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த தேர்தல் அறிக்கையில், “பீகார் மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். ஒரு கோடி மகளிருக்கு லாட்ஜாதிபதி தீதி திட்டத்தின்  கீழ் பணப்பலன் அளிக்கப்படும். கர்பூரி தாக்கூர் கிசான் சம்மான் நிதி என்ற பெயரில் விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 75 லட்சம் மகளிருக்கு சுய தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 10 லட்சம் வரை உதவித் தொகை வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்படும். 50 லட்சம் பேருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும். இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும். 

125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். ஏழை மாணவர்களுக்கு முன் பருவ பள்ளிக் கல்வி முதல் (கேஜி - KG) முதுநிலை கல்லூரி கல்வி வரை (PG) இலவசக் கல்வி வழங்கப்படும். பீகார் மாநிலத்தில் இரு எய்ம்ஸ் மருத்துவமனையும், ஐ.ஐ.டி.யும் உருவாக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த தேர்தல் அறிக்கையானது பீகார் மாநில மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisment