பீகார் மாநிலத்தில், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதாவது அம்மாநிலச் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் முடிவுகள் நவம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதனையடுத்து தேர்தல் களம் சூடு பிடித்தது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. 

Advertisment

இதனையடுத்து முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன் தினம் (04.11.2025) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (06.11.2025) காலை 7 மணியளவில் தொடங்கியது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் ஆர்ஜேடி கட்சியின் தலைவரும் மகாகபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பாஜக தலைவர்கள் மற்றும் அம்மாநில துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ​​ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் முதற்கட்ட வாக்குப்பதிவில் உள்ளடக்கியுள்ளன. 

Advertisment

மேலும் பல உயர் தலைவர்கள் இந்த கட்ட  வாக்குப்பதிவிற்கான  களத்தில் உள்ளனர். இதனையொட்டி வாக்காளர்கள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6  மணி வரை நடைபெற உள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்  பக்கத்தில், "பீகாரில் இன்று ஜனநாயகத் திருவிழாவின் முதல் கட்டம். இந்த கட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் முழு உற்சாகத்துடன் வாக்களிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில், முதல் முறையாக வாக்களிக்கப் போகும் மாநிலத்தின் அனைத்து இளம் வாக்காளர்களுக்கும் எனது சிறப்பு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.