Bihar Assembly elections concluded
பீகார் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில், 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் (09.11.2025) 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து, 20 மாவட்டங்களில் உள்ள 122 சட்டமன்றத் தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (11.11.2025) காலை 7 மணியளவில் தொடங்கியது. இந்த 122 தொகுதிகளில் முன்னாள் துணை முதல்வர்கள் ரேணு தேவி மற்றும் தர்கிஷோர் பிரசாத், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜீத் சர்மா என மொத்தமாக 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனையொட்டி வாக்காளர்கள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர்.
இந்த நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (11-11-25) 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 67.14 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். முதற்கட்ட வாக்குப்பதிவின் போது 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் முதற்கட்ட தேர்தலை விட அதிகம் பேர் வாக்களித்திருப்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின், ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us