Advertisment

பீகார் சட்டமன்றத் தேர்தல் : 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

bh-voting-2nd--phase

பீகார் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில், 121 தொகுதிகளில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணி, பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் என மொத்தம் 1,314 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Advertisment

இதில் ஆர்ஜேடி கட்சியின் தலைவரும் மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பாஜக தலைவர்கள் மற்றும் அம்மாநில துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ​​ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் முதற்கட்ட வாக்குப்பதிவில் உள்ளடக்கியுள்ளன. மேலும் பல உயர் தலைவர்கள் இந்த கட்ட வாக்குப்பதிவிற்கான களத்தில் இருந்தனர். முதற்கட்ட வாக்குப்பதிவில் 3.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு பிறகு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் (09.11.2025) 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் 20 மாவட்டங்களில் உள்ள 122 சட்டமன்றத் தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (11.11.2025) காலை 7 மணியளவில் தொடங்கியுள்ளது. இந்த 122 தொகுதிகளில் முன்னாள் துணை முதல்வர்கள் ரேணு தேவி மற்றும் தர்கிஷோர் பிரசாத், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜீத் சர்மா என மொத்தமாக 1302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனையொட்டி வாக்காளர்கள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

bh-voting
கோப்புப்படம்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கடந்த 6ஆம் தேதி மற்றும் இன்று என இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன். அதே சமயம் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்  பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பீகார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களுக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் அதில் தீவிரமாகப் பங்கேற்று வாக்களிப்பதில் புதிய சாதனையைப் படைக்க வேண்டும். முதல் முறையாக வாக்களிக்கப் போகும் மாநிலத்தின் இளம் தோழர்களுக்கு நான் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறேன், அவர்கள் தாங்களாகவே வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், 6 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. அதாவது ஜம்மு-காஷ்மீரில் புட்காம் மற்றும் நக்ரோட்டா, ராஜஸ்தானில் அன்டா, ஜார்க்கண்டில் காட்சிலா, தெலுங்கானாவில் ஜூபிலி ஹில்ஸ், பஞ்சாபில் தர்ன் தரன், மிசோரமில் டம்பா, ஒடிசாவில் நுவாபாடா ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

voters 2nd phase Assembly election Bihar Voting
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe