பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் கடந்த 6ஆம் தேதியும் (06.11.2025) , 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதியும் (11.11.2025) நடைபெற்றன. இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (N.D.A.), காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி), தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று (14.11.2025) காலை 8 மணியளவில் தொடங்கியது. அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸ் என பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்க்ப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர்.  

Advertisment

இந்நிலையில் 243 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. அதன்படி காலை 10.00 மணியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 161 இடங்களிலும், இந்தியா கூட்டணி 78 இடங்களிலும், ஜன் சுராஜ் கட்சி 2 இடங்களிலும்,  மற்றவை 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.