பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் உள்ளன. பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால் இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது.
ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே ஆயுத்தமாகி வந்தனர். ஒருபுறம், மாநில அரசின் மீதுள்ள அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்ய தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம், தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.கவுடன் இணைந்து நிற்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இது ஒருபுறமிருக்க, தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த இரு தினங்களாக இறுதிகட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தினர். அதில், தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் பீகாரின் 243 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பாட்னாவில் இருந்து நேற்று டெல்லி திரும்பினர்.
இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற்று அம்மாத இறுதிக்குள்ளே முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பை, பீகார் அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி தேசிய கட்சித் தலைவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.