மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபாலில் எய்ம்ஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில், மகப்பேறு மருத்துத் துறையில் பணி புரியும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக்கு செல்வதற்காக மருத்துவமனை வளாகத்தில் உள்ள லிப்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அருகில் முகமூடி அணிந்து வந்த நபரும் லிப்டில் வந்துள்ளார். லிப்ட் மேல் நோக்கி செல்லும்போது அந்த நபர் பெண் ஊழியரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர், லிப்டில் இருந்து இறங்கும் நேரத்தில், சுற்றும் முற்றும் பார்த்த அந்த நபர், அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உதவி கேட்டபடியே கத்திக்கொண்டு அந்த நபரைத் துரத்தினார். இருப்பினும், அந்த நபரை அவரால் பிடிக்க முடியவில்லை. பின்னர், அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரினைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இது அந்த மருத்துவ மனையில் முதன்முறையாக நடைபெறும் செயின் பறிப்பு சம்பவம் எனக் கூறப்படுகிறது. பலத்தப் பாதுகாப்பு கொண்ட மருத்துவமனையில் இப்படியான ஒரு சம்பவத்தைச் செய்து விட்டு, குற்றத்தில் ஈடுபட்ட நபர் எளிதில் தப்பியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது மருத்துவமனையின் பாதுகாப்பு பலவீனமான நிலையில் இருப்பதைக் காட்டுவதாகப் பலரும் குற்றம் சட்டி வருகின்றனர்.
பொதுவாக, எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இந்திய அரசின் உயர்தர மருத்துவமனைகளில் ஒன்றாகும். இத்தகைய மருத்துவமனைகள் 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில், பலத்த பாதுகாப்பு கொண்ட மருத்துவமனையில் ஒரு நபர் சர்வ சாதாரணமாக ஒரு குற்றச் சம்பவத்தைச் செய்துவிட்டு, அத்தனை பாதுகாவலர்களையும் தாண்டி தப்பி ஓடியுள்ள சம்பவம், மருத்துவமனையின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Follow Us