ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 2.47 லட்சம் விளைநிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதி நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழைபெய்து வருவதால் கடந்த சில நாட்களாகவே பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த மாதம் 27ஆம் தேதி 100 அடியை தாண்டியது. இதனால் அணைக்கு வந்த உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியேற்றப்பட்டதால் பவானி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிறகு நீர் வரத்து சீரானது. இந்நிலையில் மீண்டும் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.91 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் காலை 11:30 மணியளவில் பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. அணைக்கு 7,669 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பவானிசாகர் அணைக்கு வந்த உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால் பவானி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் ஆர்ப்பரித்துச் சென்றது. சத்தியமங்கலம் சதுமுகை பிபி அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் பவானி ஆற்றில் நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. ஆற்றில் யாரும் இறங்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் அணையைக் கண்காணித்து வருகின்றனர். பவானிசாகர் அணை இதுவரை 32 முறை 100 அடியை எட்டியுள்ளது. தற்போது 24 வது முறையாக 102 அடியை பவானிசாகர் அணை எட்டியுள்ளது. பொதுப்பணித்துறையினர் வருவாய்த்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.