தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பொழிந்து வரும் நிலையில் இன்று இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99 அடியை எட்டியுள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி என்ற நிலையில் 100 அடியைத் தொட்டவுடன் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பவானி ஆறு மற்றும் மயாற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/26/a4556-2025-07-26-17-03-59.jpg)
ஜூலை மாத இறுதி வரையில் பவானிசாகர் அணையில் 100 அடி மட்டுமே நீரை தேக்கி வைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதன் காரணமாக தற்பொழுது பவானிசாகர் அணை நீர்மட்டம் 99 அடியை எட்டியுள்ளதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு நீர்வள ஆதாரத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் வருவாய்த்துறை ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் பவானிசாகர் அணையின் கரையோரம் உள்ள மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.