ஈரோடு மாவட்டம் பவானி அருகே பெரிய மோளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (69). இவர் அதே பகுதியில் தங்கை, தம்பியுடன் சேர்ந்து 54 ஆண்டுகளாக கைத்தறி மூலம் ஜமுக்காளம் நெய்து வருகிறார்.
ஒரு வாரத்திற்கு முன்பு துபாயில் வசிக்கும் வந்தவாசியை சேர்ந்த வினோ சுப்ரஜா என்ற பேஷன் டிசைனர், பவானி வந்து கையால் வித்தியாசமான முறையில் ஜமுக்காளம் நெய்து வரும் சக்திவேலை சந்தித்தார்.பின்னர் தனக்கு வேண்டிய டிசைனில் ஜமக்காளம் நெய்து தர கேட்டுள்ளார். அவரும் ஜமக்காளம் நெய்து தரவே, அதைப் பெற்றுக் கொண்ட வினோ சிப்ராஜா, சக்திவேலையும் அழைத்துக் கொண்டு லண்டன் சென்றார்.
அங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்த 2025 ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில், நடனக் கலைஞர் வான்மதி ஜெகன் என்பவர் பவானி ஜமக்காளத்தை கையில் ஏந்தியபடி நடனமாடினார்.அதைத்தொடர்ந்து வினோ சுப்ராஜா, நெசவாளர் சக்திவேல் கையில் குட்டி ராட்டினத்தை ஏந்தியபடி பேஷன் ஷோ நிகழ்ச்சியில் நடந்து வந்தார்.
இதுகுறித்து நெசவாளர் சக்திவேல் கூறும் போது, 'பவானி ஜமக்காளம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக நெசவாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதற்கு காரணம் ஜமக்காளம் நெய்தல் என்பது கடினமான வேலை. கூலியோ மிகக் குறைவு. கூலி கூடுதலாக இருந்தால் இத்தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். மேலும் நெசவு குறித்த பாடம் பள்ளி, கல்லூரிகளில் கொண்டு வந்தால் 100 மாணவர்களில் 10 பேராவது இத்தொழிலை மீட்டெடுப்பர். மத்திய, மாநில அரசுகள் ஜமக்காள தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.
ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய நெசவாளர் சக்திவேலுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.