ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் 28 ஆம் ஆண்டு பாரதி விழா ஈரோடு கொங்கு கலையரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவிற்கு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றினார். கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு உருவப்படத்தை மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி திறந்து வைத்தார். தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா.ராஜனுக்கு பாரதி விருது கேடயம் மற்றும் தகுதிப் பட்டயத்துடன் பொற்கிழியாக ரூ.50,000 வழங்கப்பட்டது.
'சரித்திரத் தேர்ச்சி கொள்' என்ற தலைப்பில் தமிழக அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பேசுகையில்,"மாணவர்கள் மனப்பாடம் செய்கிறார்கள் ஆனால் சிந்திப்பதில்லை. இன்றைய இளைஞர்களை சிந்திக்க வைப்பது அவசியம். அவர்களை சிந்திக்க வைக்கும் மாபெரும் முயற்சியில் மக்கள் சிந்தனைப் பேரவை தொடர்பு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
மாணவர்கள் சிந்திக்க வேண்டும் என்றால் வாசிக்க வேண்டும். வாசித்ததை விவாதிக்க வேண்டும். மறு கருத்துகளை சொல்ல வேண்டும். கருத்து பரிமாற்றம் மூலம் தான் ஒருவர் சிந்திப்பதை தொடங்க முடியும். அதற்கு மூல காரணமாக இருப்பது வாசிப்பு. 20 ஆம் நூற்றாண்டில் உண்மையான சிந்தனையாளர்களாக பாரதியும், பாரதிதாசனும் இருந்தனர். நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பாரதியாரும், தமிழினத்தின் எழுச்சிக்கு பாடுபட்ட பாரதிதாசனும் பலவற்றில் ஒத்துப்போகின்றனர். எல்லா மதங்களும் நல்லிணக்கத்தோடு இருக்க வேண்டும் என விரும்பியவர் தான் பாரதி. கண்ணனை பற்றி பாடிய பாரதி அல்லாவை பற்றியும், இயேசுவைப் பற்றியும் பாடினார். பாரதி தன்னுடைய காலத்தில் எதையெல்லாம் சிந்திக்கப்பட்டதோ, அதையெல்லாம் தாண்டி சிந்தித்தவர் என்பதை உணர வேண்டும். அவருடைய பார்வை அனைத்தும் ரௌத்திரம் பழகு, சரித்திரத் தேர்ச்சி கொள் என்று தமிழர்களை விழிப்புணர்வு கொள்ளச்செய்வதாகத் தான் இருந்தது. சரித்திரம் என்பது பல்வேறு மனிதர்களின் வாழ்க்கை முறை. அதை பதிவு செய்ய கற்றுக் கொண்டால் சரித்திர தேர்ச்சி கொண்டோம் என பொருள். அதனை பாரதி செய்தார்.
மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், தமிழர்களை நல்வழிப்படுத்துபவராகவும், கலகக்காரராகவும், எண்ணத்தில் கிளர்ச்சி உள்ளவராகவும் இருந்தார் பாரதி. தமிழ் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பாடியவர்கள் பாரதியும், பாரதிதாசனும். சிறிய விரிசல் கிடைக்காதா, அதை பெரிதாக்க மாட்டோமா என்ற அடிப்படையில் தான் நம் சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு தமிழர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் அடுத்த ஆண்டு முதல் பாரதியைப் போன்று பாரதிதாசனுக்கும் மக்கள் சிந்தனைப் பேரவை விழா எடுக்க வேண்டும்'' என்றார்.
முன்னதாக ஏற்புரையில் பாரதி விருதாளர் தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா.ராஜன் பேசுகையில், ''மாணவர்களின் ஆராய்ச்சி நோக்கம், எண்ணம் சரியாக இருந்தால் உதவி செய்வதற்கு ஏராளமானவர்கள் உள்ளனர். மாணவர்கள் எளிய மனிதர்களிடம் இருந்தும் கற்றுக்கொள்ள முடியும். ஆய்வு மேற்கொள்ளும் பேராசிரியர்கள் அந்த பதவியை கல்வி நிலைய வளாகத்திலேயே விட்டு விட்டு வர வேண்டும். அப்போது தான் மிகச்சிறந்த ஆய்வாளர்களாக உருவாக முடியும். பல்வேறு அறிவியல் திறனை எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் மாணவர்கள் தான்.அவர்கள் தான் எனக்கு பேராசிரியர்கள். மாணவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன். தேர்வுத் தாளில் பெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் உழைப்பும், நேர்மையும் தான் சிறந்த ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும்.
கொடுமணல், கீழடி, சிவகலை போன்ற இடங்களில் ஆராய்ச்சி மாணவராக இருந்து காலக்கணிப்பு செய்துள்ளேன். இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட காலக்கணிப்புகளை தமிழக அரசு சென்னை பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைக்கழகங்கள் செய்துள்ளன. தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு இப்போது அறிவியல் ரீதியாக தமிழின் காலம் கிமு.685 என சிவகலையில் நிறுவி இருக்கிறோம். அகழாய்வு செய்ய ஏராளமானவை இருக்கின்றன. அதற்கு போதுமான மனிதவளம் தான் இல்லை. வருங்கால மாணவர்கள் அகழாய்வு பணியை தொடர்வார்கள் என்ற நம்பிக்கையோடு இப்போது உள்ளவர்கள் அகழாய்வை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். அகழாய்வு செய்யும் மாணவர்கள் கண்டறிந்தவற்றை முழுமையாக ஆவணப்படுத்த வேண்டும்" என்றார்.
முன்னதாக பாரதி இறுதிப் பேருரை ஆற்றிய கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து பேரவையின் சீருடை அணிந்த கல்லூரி மாணவர்கள் பேரணியாக நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று விழா மேடைக்கு வந்தனர். பாரதி ஜோதியை ஏற்றி வைத்து அணிவகுப்பை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இ.மான்விழி தொடங்கி வைத்தார். விழா நடைபெற்ற இடத்தில் ஜோதியை மாணவர்களிடமிருந்து விருதாளர் ராஜன் பெற்றுக்கொண்டார். மக்கள் சிந்தனைப் பேரவை துணைத் தலைவர் கோ.விஜயராம லிங்கம் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் க.வெற்றிவேல் நன்றி கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/a5795-2025-12-12-19-13-33.jpg)