புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் இளைஞர்களால் பொங்கல் விழா போன்ற திருவிழா கொண்டாட்டங்களுக்காகத் தொடங்கப்பட்ட பாரதப் பறவைகள் இளைஞர் மன்றம், சில ஆண்டுகளில் நலிவுற்ற மக்களுக்கான நலத்திட்டங்கள், சேவை செய்யும் அறக்கட்டளையாக உருவெடுத்து, இன்று மாவட்டத்தின் பல கிராமங்களிலும் பரவியுள்ளது பாரதப் பறவைகள்
இந்த அறக்கட்டளையில் பெருந்தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் உறுப்பினர்களாக இல்லை. தினக்கூலி வேலை செய்வோரே உறுப்பினர்கள். தங்கள் மகிழ்ச்சிக்காக சங்கங்களில் இணைவது வழக்கமான இந்தக் காலக்கட்டத்தில், அடுத்தவர்களின் மகிழ்ச்சிக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். சமீபகாலமாக, அடுத்தவர்களை மகிழ்விக்கும் எண்ணம் கொண்ட ஆசிரியர்களும் இணைந்துள்ளனர். குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு சுமார் 20 பேருக்கு மேல் வீடுகள், ஏராளமானவர்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், சைக்கிள்கள், மூன்று சக்கர மாற்றுத்திறனாளி சைக்கிள்கள் என, ஒவ்வொரு ஆண்டும் நலிவுற்ற பயனாளிகளைக் கண்டறிந்து, பல லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். இவர்கள் பல கி.மீ. நடந்து பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை இழந்து தாத்தா, பாட்டி, உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகள், மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் எதுவும் கிடைக்காமல் சோர்வாக முடங்கிக்கிடப்பதைப் பார்த்து, அந்தக் குழந்தைகளைக் கண்டறிந்து ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். கண்டறியப்பட்ட குறிப்பிட்ட குழந்தைகளை காலையிலேயே பெரிய துணிக்கடைகளுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் விரும்பும் புத்தாடைகள், கண்ணாடிகள், செருப்புகள், பேன்சி பொருட்களை வாங்கிக் கொடுத்து, அதே மகிழ்ச்சியோடு வேனில் புதுப்பட்டினம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று, கடலில் கும்மாளமிட வைத்து, குதிரை ஏற்றம், சறுக்கு விளையாட்டு என விளையாட வைத்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு பிரியாணி விருந்தும் படைத்து, பட்டாசுகள் வெடித்து, குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து, மனமகிழ்ச்சியோடு அந்தக் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.
நாம் சம்பாதிப்பதில் கொஞ்சமாவது மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும். அந்த வகையில் தான் 'பாரதப் பறவைகள்' அறக்கட்டளை, மற்றவர்களின் கஷ்டங்களைப் பார்த்து, நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம். தீபாவளி நேரத்தில், தீபாவளி கொண்டாட முடியாத நிலையில் உள்ள குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்கிறோம் என்றனர்.