தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (14.10.2025) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் நாளை (17.10.2025) வரை நடைபெறவுள்ளது. இதற்கிடையே நேற்று (15.10.2025) 2வது நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு கைகளில் கருப்பு பட்டை (பேட்ஜ்) அணிந்து வந்திருந்தனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளதாகக் கூறப்பட்டது. 

Advertisment

இதனையடுத்து இன்று (16.10.2025) சட்டப்பேரவையின் 3ஆம் நாள் கூட்ட நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என பேட்ச் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். முன்னதாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையத்தில் உள்ள அன்னை சத்யா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெறுவதாக பகீர் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

pmk-anbumani-mla-taem

மேலும் பாமக சட்டமன்ற குழுத் தலைவர் மற்றும் கொறடாவை மாற்றக் கோரிய கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்க மறுத்த நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தனர். அதாவது பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கு இடையே பனிப்போர் நீடித்து வருவதும் கவனிக்கத்தக்கது.