கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே மாரத்தஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் முனிரெட்டி. இவரது மகள், 29 வயதான கிருத்திகா ரெட்டி, பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் தோல் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்த 34 வயதான மருத்துவர் மகேந்திர ரெட்டிக்கும் கிருத்திகாவுக்கும் இடையே, பெற்றோர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக கிருத்திகா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார் அப்போது, ஒரு நாள் அவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே, கணவர் மகேந்திர ரெட்டி, மனைவி கிருத்திகாவுக்கு ஐ.வி. மூலம் மருந்து செலுத்தியுள்ளார். அடுத்த நாள், கிருத்திகா தனது கணவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஐ.வி. மூலம் மருந்து செலுத்தும்போது வலி ஏற்படுவதாகவும், அதனால் ஐ.வி.யை அகற்றப் போவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், மகேந்திர ரெட்டி, "இன்னும் இரண்டு நாட்கள் மருந்து செலுத்தினால் உடல்நிலை சீராகிவிடும்" என்று கூறி, ஐ.வி.யை அகற்ற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, தொடர்ந்து இரண்டு நாட்கள் அதே மருந்து செலுத்தப்பட்டது.
இந்நிலையில், ஏப்ரல் 23 அன்று கிருத்திகா வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கிருத்திகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால், கிருத்திகாவின் பெற்றோர் முதலில் புகார் அளிக்க மறுத்துவிட்டனர். மேலும், கணவர் மகேந்திர ரெட்டி, பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கூறியதையடுத்து, கிருத்திகாவின் பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். இருப்பினும், காவல்துறையின் தொடர் வற்புறுத்தலால், கிருத்திகாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கிருத்திகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர், அவரது உடல் உறுப்புகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில், அக்டோபர் 13 அன்று கிருத்திகாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை காவல்துறைக்கு கிடைத்தது. அதில், அதிகளவில் மயக்கமருந்து செலுத்தி கிருத்திகா கொலை செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் மகேந்திர ரெட்டியை விசாரித்தபோது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன.
திருமணத்திற்கு முன்பு, கிருத்திகாவுக்கு குறைந்த ரத்த அழுத்தம், அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகள் இருந்தன. ஆனால், இவை குறித்து மகேந்திர ரெட்டியிடம் கிருத்திகா தெரிவிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு இந்தப் பிரச்சனைகள் மகேந்திர ரெட்டிக்கு தெரியவந்தபோது, அவர் மனைவி மீது கடும் கோபத்தில் இருந்தார். மேலும், கிருத்திகாவுக்கு அடிக்கடி உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதால், அவரைத் தீர்த்துக்கட்டிவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய மகேந்திர ரெட்டி திட்டமிட்டுள்ளார். அதன்படி, உடல்நலக் குறைவால் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த கிருத்திகாவுக்கு, ஐ.வி. மூலம் அதிகளவு மயக்க மருந்து செலுத்தி மகேந்திர ரெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்துள்ளனர். மேலும், அவரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மனைவியின் உடல்நலப் பிரச்சனைகளை அறிந்து, கணவனே மயக்க மருந்து செலுத்தி கொலை செய்த இந்தச் சம்பவம் பெங்களூரு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/16/untitled-1-2025-10-16-17-46-56.jpg)