நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கோலகலமாகவும், விமர்சையாகவும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். மேலும், கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டு கொண்டனர். இந்த நிலையில், தீபாவளிப் பரிசு கிடைக்காததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 27 வயது இளைஞரை, அவரது முதலாளி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபுரில் 25 வயதான சுஜித் கன்வீர் என்பவர் வெற்றிலை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் நிதேஷ் தாக்கரே (27) பணிபுரிந்து வந்தார். இந்த சூழ்நிலையில், தீபாவளியன்று தனது முதலாளியான சுஜித்திடம் இருந்து புதிய ஆடைகள் மற்றும் பரிசு வரும் என்று நிதேஷ் தாக்கரே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சுஜித், நிதேஷுக்கு எந்தவித தீபாவளி பரிசும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் அதிருப்தியடைந்த நிதேஷ் தாக்கரே, சுஜித்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், சுஜித்தை கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த சுஜித் கன்வீர், நிதேஷை கொலை செய்ய தனது நண்பர்களோடு திட்டம் தீட்டினார். அந்த திட்டத்தின்படி, கன்வீர் ஆன்லைனில் ஒரு கத்தியை ஆர்டர் செய்துள்ளார். அதனை தொடர்ந்து தியேட்டரில் படம் பார்க்க செல்வோம் எனக் கூறி நிதேஷை சுஜித் அழைத்துள்ளார். அவரின் பேச்சை நம்பிய நிதேஷ், சுஜித்துடன் சென்றுள்ளார். அப்போது நிதேஷ் தாக்கரேவை, ஒரு சட்டக் கல்லூரிக்குப் பின்னால் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு சுஜித் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சுஜித் மற்றும் அவரது நண்பர்கள், நிதேஷ் தாக்கரேவை கொடூரமாகத் தாக்கினர். மேலும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து நிதேஷை பலமுறை குத்தினர். இதில் படுகாயமடைந்த நிதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், நிதேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், நிதேஷை சுஜித் மற்றும் அவரது நண்பர்கள் கொலை செய்தது தெரியவந்தது. அதன்படி, கரண் மெஷ்ராம் (22), யாஷ் சோட்டலால் ரவுத் (19), அனில் ராமேஷ்வர் போண்டே (22), பிரதிக் மாணிக் மெஷ்ராம் (22), தௌசிப் ஷேக் (23), மற்றும் சுஜித் கன்வீர் (25) ஆகியோர் ஒரு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment