தமிழக அரசில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பீலா வெங்கடேசன் (வயது 56) ஆவார். இவர் உடல் நலக் குறைவு காரணமாகக் கடந்த 2 மாதங்களாகச் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பீலா வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி இன்று (24.09.2025) பரிதாபமாக உயிரிழந்தர். மறைந்த பீலா வெங்கடேசன் தமிழக அரசின் எரிசக்தித் துறையில் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரானா நோய்த் தொற்று காலத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளராகச் சிறப்பாக பணியாற்றி மக்கள் மனதில் கவனத்தை ஈர்த்திருந்தார். மறைந்த பீலா வெங்கடேசன் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் பிறந்தார் ஆவர். தமிழகக் காவல்துறையின் தலைமை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற எல். என். வெங்கடேசனின் மகள் பிலா வெங்கடேசன் ஆவார். இவரது தாய் ராணி வெங்கடேசன். இவர் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர். மறைந்த பீலா வெங்கடேசனுக்குப் பிங்கி, பிரீத்தி என 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 1997ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கடேசன், இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி, பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர். மேலும் பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/24/beela-rajesh-mks-2025-09-24-22-59-29.jpg)