வ உ சி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி. ஐ. டி. யு. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஓட்டப்பிடாரம் வ.உ.சி. பிறந்த இல்லத்தில் இருந்து மக்கள் ஒற்றுமை பிரச்சார இயக்க பயணத்தை நேற்று காலை 7 மணியளவில் தொடங்கினர். பின்னர் புதுக்கோட்டை கடைவீதியில் பிரச்சார இயக்கத்தை முடித்துவிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சி சிலைக்கு வந்தனர். வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கு மக்கள் ஒற்றுமை பிரச்சார இயக்கத்தின் நோக்கம் குறித்தும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்தும் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆர். ரசல் மைக்கில் பேசி கொண்டிருந்தார்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு பாரதிய ஜனதா கட்சியினர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவிக்க வந்திருந்தனர். அப்போது பாஜகவை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் திடீரென வேகமாக வந்து சிஐடியூ மாவட்ட செயலாளர் ஆர். ரசல் கையிலிருந்த மைக்கை பிடுங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தோழர்கள் அந்த பாஜக பிரமுகரை பளாரென அறைந்து அடித்து விரட்டினர். மத்திய அரசை கண்டித்தும் மோடியை எதிர்த்தும் மைக்கில் பேசக்கூடாது என பாஜகவினர் எச்சரித்தனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இரு கட்சியினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தின் போது அங்கு போலீஸ் இல்லாததால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அப்போது அங்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சசிகலா புஷ்பா ஆகியோர் வந்தனர். இதனால் அங்கு நிலைமை மேலும் மோசமானது. மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வந்து இரு தரப்பினரையும் விலக்கி விட்டு சமாதானப்படுத்தினர். இந்த மோதல், கைகலப்பு சம்பவம் தொடர்பாக சிஐடியு மாவட்ட தலைவர் ஆர். பேச்சிமுத்து தரப்பிலும், பாஜக பிரமுகர் சொக்கலிங்கம் தரப்பிலும் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செப்டம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் 15 இடங்களில் மக்கள் ஒற்றுமை பிரச்சாரப் பயணம் நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வழங்க வேண்டி சி.ஐ. டி. யு. சார்பில் கடந்த 29ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. முறையாக அனுமதி பெற்று நடத்தப்பட்ட மக்கள் ஒற்றுமை பிரச்சார பயணத்துக்கு போலீசார் எந்தவித பாதுகாப்பும் கொடுக்காத காரணத்தினால் தான் இந்த அசம்பாவிதமும் அராஜகமும் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
மைக்கை பிடுங்கி பாஜகவினர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவமும், அதைத் தொடர்ந்து தோழர்கள் பளார் என அடித்து விரட்டி மல்லுக்கட்டிய சம்பவமும் தூத்துக்குடி மாவட்ட அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி