எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் என்ற தந்தை-மகன் இருவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அந்த நேரத்தில் நாடு முழுவதும் பேசுபொருளானது. இது அதிமுக ஆட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, கடும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு, அடுத்தடுத்து போராட்டங்களையும் முன்னெடுத்தது.

அதிமுக ஆட்சியில் நடந்த காவல்நிலைய மரணங்களை (லாக்கப் மரணங்கள்) கடுமையாக எதிர்த்துவிட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. ஆனால், ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பது போல, திமுக ஆட்சியில் தொடர்ந்து காவல்நிலைய மரணங்கள் நடந்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், தங்க நகை திருட்டு வழக்குத் தொடர்பாக காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, “அஜித்தை ஏன் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தவில்லை? வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது?” என்று அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தெடுத்தது.

Advertisment

99

இது தொடர்பாக ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே, மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில், இதேபோல் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் ஒரு இளைஞரை காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

102

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் அபுதல்ஹா என்பவர், ஒரு இளைஞரை காவல்நிலையத்தில் வைத்துத் தாக்கியுள்ளார். மேலும், அவருடன் அதே காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சுயசம்பு உள்ளிட்ட காவலர்கள், காலால் எட்டி உதைத்தும், லத்தியால் தாக்கியும் உள்ளனர். இந்தச் சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையடுத்து  தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞர் என்ன வழக்கிற்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார் அன்றைய தினத்தில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்கள் குறித்த தகவல்களை  விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஏ.டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடந்தத மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.