மசினகுடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியை விரட்ட முடியாமல் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

Advertisment

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மசினகுடி பகுதியில் குடியிருப்பு பகுதி ஒன்றிற்குள் திடீரென புகுந்த கரடி ஒன்று உலா வந்தது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. உடனடியாக வனத்துறையினருக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த மசினகுடி வனத்துறையினர் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாகப் போராடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் அந்தப் பகுதிக்கு கரடி வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை சிவக்குமார் காலனி என்ற பகுதியில் ரிது என்பவர் வீட்டிற்குள் கரடி புகுந்தது. உடனடியாக பொதுமக்கள் வீட்டிற்குள் இருந்த கரடியை விரட்டி, உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்து மசினகுடி வனத்துறையினர் தீப்பந்தத்தைக் கொண்டு வனத்திற்குள் கரடியை விரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த கரடி குடியிருப்பு பகுதிக்கு உள்ளேயே இருந்த புதர்களில் மறைந்து கொண்டு போக்கு காட்டியது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக குடியிருப்பு பகுதிக்கு உள்ளேயே கரடியானது சுற்றி சுற்றி ஓடி வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.