ஈரோடு வீரப்பன்சத்திரம் கலைவாணர் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (30). வங்கி ஊழியர். இவரது மனைவி திவ்யா (28). சீனிவாசன் ஈரோடு பிருந்தா வீதியை சேர்ந்த அவரது நண்பருக்கு கடந்த மே மாதம் 29ம் தேதி ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். சீனிவாசன் கொடுத்த பணத்தை பலமுறை அவரது நண்பரிடம் கேட்டும் திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் கடந்த 4ம் தேதி சீனிவாசன் மீண்டும் அவரது நண்பர் வீட்டுக்கு சென்று கடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்ததால் மனமுடைந்த சீனிவாசன், நண்பர் வீட்டின் முன்பே, அவர் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தனக்கு தானே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து சீனிவாசனின் மனைவி திவ்யா, ஈரோடு டவுன் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.