நாட்டில் உள்ள ஏழை மக்கள் விவசாயிகள் அன்றாட செலவுகளுக்கும், திடீர் செலவுக்கும் விவசாயப் பணிகளுக்கு தங்களிடம் உள்ள தங்க நகையை வங்கியில் குறைந்த வட்டியில் அடமானம் வைத்து வாழ்வாதாரத்தை காத்து வந்தனர்.
இவர்களுக்கு பேரதிர்ச்சியாக வங்கியில் அடகு வைக்கப்படும் நகைக்கு 'அது எப்போது வாங்கியது' என ரசீது வேண்டும். வங்கியில் உள்ள நகையை முழு பணத்தைக் கட்டி மீட்டு மீண்டும் அடமானம் வைத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.
இதற்கு பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராளுமன்றத்தில் ஏழை மக்கள் விவசாயிகள் ஒன்றிய அரசு அறிவித்துள்ள நகைக்கடன் வரன்முறையால் பாதிக்கப்படுவதையும் மேலும் இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார். நேரிலும் சந்தித்து வலியுறுத்தினார்.
பின்னர் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்போதும் போல் நகைகளை ரினிவல் செய்து வைத்துக் கொள்ளலாம் நகைகள் விவரம் குறித்த ரசீதுகள் கேட்கப்பட மாட்டாது என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்தது. இதை அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.
இந்நிலையில் பிரபல வங்கி இதனை ஏற்காமல் இன்று வரை நகை கடன் வைத்துள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் முழு பணத்தையும் கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கந்துவட்டி வாங்கி பணத்தைக் கட்டி மீண்டும் அடகு வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதில் சிதம்பரத்தில் உள்ள ஒரு பிரபல வங்கி வாசலில் ஒருவர் சாக்கு பையில் பணத்துடன் அமர்ந்துள்ளார். வங்கியில் நகைக் கடன் வைத்தவர்கள் இவரிடம் ஒரு லட்சம் 1000 ஆயிரம் ரூபாய் கமிஷன் கொடுத்து விட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு வங்கியில் கட்டுகிறார்கள். பின்னர் மீண்டும் அடகு வைத்த அந்த பணத்தை இவரிடம் வங்கி அலுவலர்கள் உதவியுடன் வழங்கப்படுகிறது. இந்த சம்பவம் கந்துவட்டி கும்பலை விட கொடுமையாக உள்ளது.
இதற்கு வங்கி அலுவலர்கள் அனைவரும் உறுதுணையாக உள்ளனர். வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து தெரியும். சிதம்பரம் அருகே உள்ள எம்ஜிஆர் திட்டு மீனவ கிராமத்தில் இருந்து வந்த மீனவப் பெண் அம்மா கண்ணு கூறுகையில், ''ஒரு லட்சத்து 70 ஆயிரம் நகை கடன் வைத்துள்ளேன். அதனை வட்டியை மட்டும் கட்டி மீண்டும் அடகு வைக்க வந்தேன். முழு பணம் இல்லை என கூறினேன். அதற்கு வங்கி அலுவலர்கள் வெளியே உள்ள நபரை போய் பாருங்கள் என கூறினார்கள். அவரிடம் போய் விவரத்தை கூறினேன். அதற்கு அவர் ரூ 2 ஆயிரத்தை கமிசனாக பெற்றுக்கொண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை கொடுத்தார். ரூ 2000 சம்பாதிப்பதற்கு எவ்வளவு சிரமம் என்று எங்களுக்கு தான் தெரியும் அதனை அரை மணி நேரத்தில் வாங்கிக் கொண்டார்களே! எனவே அரசு உடனடியாக வங்கியில் வட்டியை மட்டும் கட்டிவிட்டு நகையை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் எங்களை போன்ற ஏழை மக்கள் கந்துவட்டி கொடுமைக்கு ஆளாகுவோம் ''என்றார்.
வங்கி வாசலில் பணப்பையுடன் அமர்ந்துள்ள அந்த நபரிடம் நாம் சென்று பேசினோம். அப்போது அவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆயிரம், ஒன்றை லட்சம் ரூபாய் என்றால் ரூ 1500 கொடுங்கள் என கூறினார். தற்போது கமிஷன் கொடுக்க காசு இல்லை பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என வந்து விட்டேன்.
இதுகுறித்து மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் கேட்டபோது, ''நான் தொடர்ந்து இதுகுறித்து வலியுறுத்தியதின் பெயரில் ஆர்பிஐ உத்தரவை வாபஸ் பெற்றது. இதில் சில வங்கிகள் வட்டியை மட்டும் பெற்றுக் கொண்டு ரினிவல் செய்து கொள்கிறார்கள். சில வங்கிகள் வியக்காணம் பேசுகிறார்கள். இதனால் வங்கியில் நகையை மீட்கும் போது ஏழை மக்கள் மத்தியில் கந்துவட்டி கொடுமை அதிகமாகிறது. இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சரிடம் பேசுகிறேன். இந்த சம்பவம் வேதனையாக உள்ளது'' என்றார்.