சமீப காலங்களில் வெளிநாட்டினர் உரிய ஆவணங்கள் இன்றி தமிழ்நாட்டில் சட்ட விரோதமாகத் தங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து, தொடர்ந்து சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், திருப்பூரில் உள்ள பல நிறுவனங்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்யுமாறும் திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.  

Advertisment

இந்த நிலையில்,  திருப்பூர் மாவட்டம் நல்லூர் முஜியாபுரம் பகுதியில் உள்ள பனியன் கம்பெனிகளில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து வேலை செய்துவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், வங்கதேசத்தை சேர்ந்த சைபுல் இஸ்லாம் (26), ரஹத்துல்லா (28), மோரியம் (27), ஷாஷ்ரியாலம் (28), தோஷமினா ஆக்டர் (29) மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 9 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.  

Advertisment

இவர்கள் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி சட்டவிரோதமாக இங்குத் தங்கி வேலைபார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களிடமிருந்த போலி ஆதார் கார்டுகளை காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாகத் தங்கி வேலை பார்த்துவந்ததாக வங்கதேசத்தினர் சிலர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.