திருநங்கையாக நடித்த வங்கத்து இளைஞன்; 20 ஆண்டுகள் இந்தியாவில் ரகசிய வாழ்க்கை!

103

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரின் பத்வாரா பகுதியில் 30 வயதான திருநங்கை நேஹா கின்னார் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்த நிலையில், நேஹாவின் நடத்தையில் அந்தப் பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பின், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போபால் போலீசார் நேஹாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நேஹா திருநங்கை இல்லை என்றும், அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினருக்கு, அடுத்தடுத்து நேஹா கூறிய தகவல்கள் திடுக்கிட வைத்தன.

வங்கதேசத்தைச் சேர்ந்த நேஹாவின் இயற்பெயர் அப்துல் கலாம். 10 வயதில் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு நுழைந்த அப்துல் கலாம், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்திருக்கிறார். பின்னர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு போபால் வந்த அப்துல் கலாம், தனது அடையாளத்தை திருநங்கை போல் மாற்றிக்கொண்டு, நேஹா கின்னார் என்ற புதிய பெயரைத் தனக்குத் தானே சூட்டிக்கொண்டார். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, திருநங்கைகள் அதிகம் வசிக்கும் பத்வாரா பகுதியை தேர்ந்தெடுத்து, அங்கே தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார்.

அத்தோடு மட்டுமல்லாமல், நேஹா கின்னார் என்ற பெயரில் போலி ஆவணங்கள் மூலம் இந்திய வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு அடையாள அட்டைகளையும் பெற்று, இந்தியக் குடிமகனைப் போலவே அப்துல் கலாம் வாழ்ந்து வந்துள்ளார். மேலும், தனது சொந்த நாடான வங்கதேசத்திற்கு அடிக்கடி சென்று உறவினர்களைப் பார்த்து வருவதை வழக்கமாகவும் வைத்திருந்திருக்கிறார். மேலும், அவர் வங்கதேசத்திற்கு செல்லும்போது இந்தியப் பாஸ்போர்ட்டையே பயன்படுத்தியதும் தெரியவந்திருக்கிறது.இதைத் தொடர்ந்து, அப்துல் கலாமை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து அனைத்து போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இந்தியாவில் உளவு பார்த்தாரா என்ற கோணத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது.

இந்த வழக்கு, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் உள்ள ஓட்டைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு இந்தியக் குடிமகனுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்று, வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 20 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வந்திருக்கிறார். அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்போது கூட, அது சரியில்லை, இது சரியில்லை என்று மக்களை அலைக்கழிக்கும் நமது அரசு அலுவலர்களிடம், ஒருவர் போலி ஆவணங்களை மட்டுமே காட்டி அனைத்து ஆவணங்களையும்  பெற்றிருப்பது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

ஒரு நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் தேசிய பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அண்டை நாட்டைச் சேர்ந்த ஒருவர் 20 ஆண்டுகளாக இந்தியாவில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், அவ்வப்போது சொந்த நாட்டிற்கு சென்று வந்ததும் தேசிய பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Bangladesh police Transgender
இதையும் படியுங்கள்
Subscribe