நாடு முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை கால்நடைகளுக்கு இணையாக வளர்ந்துள்ளது. இதனால், சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது. மற்றொரு பக்கம், நாய்களுக்கு வெறி நோய் ஏற்பட்டு மனிதர்களையும், கால்நடைகளையும் கடித்துக் குதறும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோழி இறைச்சிக் கழிவுகளை சாப்பிடும் நாய்களுக்குத் தோல் நோய்கள் ஏற்பட்டு பரிதாபமாகச் சுற்றி வருகிறது. அதனால் நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள், தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தெரு நாய்களுக்கு தினசரி சிக்கன், முட்டை சாதம் வழங்க பெங்களூர் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தெரு நாய்கள் அதிகமாக உள்ள நகரங்களில் பெங்களூர் முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளில், பெங்களூரில் நாய்கள் வெகுவாக பெருகியுள்ள நிலையில், கூட்டமாக சுற்றித் திரியும் தெரு நாய்கள் கூட்டங்கள் பொதுமக்களுக்கும் ஆபத்தானதாக மாறி வருகிறது. இந்த நிலையில், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவற்றின் உடல் நலனை கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு ஒரு முறை உணவளிக்க பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும் இதனால், தெரு நாய்களின் ஆரோக்கியம் மேம்படும் என்றும், அலைந்து திரியும் ஆக்கிரமிப்பு குறையும் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி, தினசரி அவற்றிற்கு சிக்கன், முட்டை சாதம் மற்றும் பிற வகையான சத்தான உணவுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள 8 மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு சுமார் 600 முதல் 700 நாய்கள் என மொத்தம் 5,000 நாய்கள் வரை இருப்பதாக கணக்கிடப்பட்டு உணவளிக்க பெங்களூர் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.2.88 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது. மாநகராட்சி ஏற்கெனவே, உள்ளூர்வாசிகள் உணவகங்கள் மற்றும் சில பங்குதாரர்களுடன் இணைந்து தெரு நாய்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த புதிய திட்டம் மூலமாக, போதுமான அளவு உணவளிக்கப்படாத அல்லது பசியால் வாடும் நாய்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். இதனால், மனிதர்களையும் கால்நடைகளையும் கடிப்பதை நிறுத்திவிடும் என்று நம்பப்படுகிறது.