கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, ரேகா குப்தா டெல்லி முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறாஅர். அவரோடு சேர்த்து, 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த சூழ்நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனைக்கு ஏப்ரல் 1 முதல் தடை விதிப்பதாக டெல்லி அரசு அறிவித்தது. இது குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டெல்லி வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங், “15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களை அடையாளம் காணவும், எரிபொருள் விற்கப்படாமல் இருக்கவும் பெட்ரோல் பங்க்-குகளில் சிறப்பு கருவிகள் பொறுத்தப்பட உள்ளது. டெல்லியில் உள்ள கிட்டத்தட்ட 80 சதவீத பெட்ரோல் பங்க்-குகளில் இந்த கருவிகள் நிறுவப்பட்டுள்ளது.

அதன்படி, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்வதற்கான தடை கண்டிப்பாக அமல்படுத்தப்படும். டெல்லி அரசு, பெட்ரோலிய அமைச்சகம் மூலம், அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் தடை குறித்து ஒரு ஆலோசனையை அனுப்பி வருகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களைக் கண்டறிந்து, அவை நகரத்திற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அரசாங்கம் ஒரு சிறப்புக் குழுவையும் அமைக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து டெல்லிக்குள் நுழையும் டீசல் வாகனங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், டெல்லியில் இன்று (01-07-25) முதல் பழைய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, இன்று முதல் 10 மற்றும் 15 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் பயன்பாட்டிற்கான தடை டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன்படி பழமையான வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை பங்குகளில் வழங்கப்படாது எனவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதனை கண்காணிக்கும் விதமாக பல்வேறு இடங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் சிசிடிவி கேமராக்காள் பொறுத்தப்பட்டு சோதனையிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Advertisment

கடந்த சில மாதங்களாக தலைநகர் டெல்லியில் வாகனங்களால் அதிக காற்று மாசுபாட்டு ஏற்பட்டு வருகிறது. இதனை மனதில் கொண்டு, ஆயுள் முடிந்த வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை அமல்படுத்துமாறு காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அந்த அறிவுறுத்தலின், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. பழமையான வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மூலம், டெல்லியில் மட்டும் சுமார் 62 லட்ச வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.