ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைபற்றிய பிறகு, முதல் முறையாக தாலிபான் அரசின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்திருப்பது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றினர். அமெரிக்கா தலைமையிலான படைகள் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர். நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் நிலையில், ரஷ்யாவைத் தவிர எந்த நாடும் தாலிபான்களின் அரசை அங்கீகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகிக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அந்த வரவேற்பை ஏற்று 6 நாள் அரசு பயணமாக ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமீர் கான் முத்தகி கடந்த 9ஆம்தேதி இந்தியாவுக்கு வருகை தந்தார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவருக்கு பயண விலக்கு அளித்ததை தொடர்ந்து அவர் இந்தியா வந்துள்ளார்.

Advertisment

இந்தியா வந்துள்ள அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது என்று கூறப்படுகிறது. தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நேற்று விமானப் படை தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தாலிபன் (Tehreek-e-Taliban) அமைப்பினரை குறி வைத்து தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டது. மேலும், இத்தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் உதவியதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று (11-10-25) சந்தித்துப் பேசிய பிறகு, ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமீர் கான் முத்தகி டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு மத்தியில், ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமீர் கான் முத்தகி நடத்திய செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Advertisment

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான சட்டங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண் துணையின்றி வெளியே செல்லக்கூடாது, திருமணமான எந்த பெண்ணுக்கும் விவகாரத்து கிடையாது, ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும், உயிருடன் இருக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் புகைப்படங்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாது எனப் பல்வேறு பழமைவாதச் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது. சமீபத்தில், ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களைத் தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.