ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கடம்பூர் அருகே செங்காட்டில் கடந்த 10-ம் தேதி குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் படி கடம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வாய் கிழிந்து ரத்த வெள்ளத்தில் குட்டி யானை இறந்து கிடந்தது தெரியவந்தது. 

Advertisment

புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற்கூறு பரிசோதனை செய்தார். இதில் இரண்டு வயதான பெண்குட்டி என்பது தெரிய வந்தது. விலங்குகளை வேட்டையாடும் கும்பல் அவுட்டு காயை (நாட்டு வெடிகுண்டு) வனப்பகுதிகளில் வீசுவது வழக்கம். இந்த வகையில் வீசப்பட்டிருந்த ஒரு அவுட்டு காயை கடித்ததால் வாய் சிதறி அந்த குட்டி யானை பலியாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணையை வனத்துறையினர் தீவிரப்படுத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து (43) என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment