திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கண்ணனூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள ஐயப்ப பக்தர்கள், கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக பேருந்து ஒன்றில் புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்தை ராஜேஷ் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் இந்த பேருந்து இன்று (28.11.2025) காலை சிதம்பரம் அருகே உள்ள பூமுற்றூர் என்ற கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அங்குள்ள வெள்ளாட்டின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலம் அருகே வந்தபோது பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
அதன் பின்னர் சாலையோரத்தில் இருந்த தடுப்பு கம்பிகளில் மோதி, பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கட்டையில் மோதி நின்றது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க அச்சு உடைந்து தனியாக விழுந்தது. இதனைக் கண்டு பேருந்தில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி கூக்குரலிட்டுள்ளனர். அதோடு போருந்து பாலத்தில் இருந்து அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நெரிசல் ஏற்பட்டது. அதே சமயம் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசாரும், சிதம்பரம் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து. பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஐயப்ப பக்தர்களை மீட்டனர். மற்றொருபுறம், அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சீர்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 18 ஐயப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து மீட்கப்பட்டவர்கள் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் பேருந்தை மீட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us