பாதாளத்தில் இருக்கும் அய்யனார்; பார்த்திடாத பக்தர்கள் - கோலாகலமாக நடந்த திருவிழா!

104

சித்திரை வருடப் பிறப்பில் தொடங்கிய கிராமக் கோயில், குலதெய்வக் கோயில்களில் திருவிழாக்கள் தற்போது ஆடியில் தமிழகம் முழுவதும் களைகட்டி இருக்கின்றன. ஒவ்வொரு கோயில் விழாவிலும் ஏதேனும் ஒரு தனித்துவமான நிகழ்வு காணப்படுகிறது. அப்படி ஒரு கோயில் மாங்காடு கிராமத்தில் உள்ளது.

அய்யனார் கோயில் என்றால் குதிரைச் சிலைகளும் கம்பீரமான அய்யனார் சிலையும் காட்சியளிக்கும், ஆனால் இங்கே அய்யனாருக்கு சிலை இல்லை. என்ன உருவம் உள்ளது என்பதே பக்தர்களுக்குத் தெரியவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு கிராமத்தில், பல நூறு ஆண்டுகளாக வனப்பகுதியில் குடிகொண்டுள்ள அய்யனார் கோயில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அந்தக் கோயிலில் மூலவராக இருக்க வேண்டிய அய்யனாரை இதுவரை யாரும் கண்டதில்லை. திருப்பணி செய்து குடமுழுக்கு செய்தபோதும் கருவறை முழுமையாக மறைக்கப்பட்டிருந்ததால் அய்யனாரைப் பக்தர்கள் பார்த்ததில்லை. பார்க்கும் முயற்சியும் இல்லை.

103

தரை மட்டத்தைவிட கீழே பாதாளத்தில் உள்ள ஓட்டுக் கொட்டகையில், பூசாரி ஒருவர் மட்டுமே உள்ளே செல்லும் வழியாக அமைக்கப்பட்டு, அதனுள் பூசாரி தவழ்ந்து நுழைந்து பூஜை செய்கிறார். அவரைத் தவிர வேறு யாரும் சாமியைப் பார்த்ததில்லை. உள்ளே என்ன உருவம் உள்ளது என்பதும் யாருக்கும் தெரியவில்லை. பூசாரியும் சொன்னதில்லை. அத்தனை ரகசியமான கருவறை. இந்தக் கோயில் பூஜைக்கு ஏற்பாடுகள் நடந்து, அய்யனார் கோயிலில் உள்ள கருப்பர், ஆராத்திக்காரி, காளை என பரிவாரத் தெய்வங்களின் வண்ணமயமான களிமண் சிலைகளை நெடுவாசல் மண்பாண்டக் கலைஞர்கள் செய்ய, அய்யனார் கோயிலுக்கு உரிமையுள்ளவர்கள் தூக்கி வருகின்றனர்.

வானவேடிக்கையுடன், பறை இசை வாத்தியங்கள் முழங்க, சாமி சிலைகளைப் பக்தர்கள் தலையில் சுமந்து வர, முன்னால் பெண்கள் வேப்பிலையுடன் ஆடி வர, புரவி எடுப்பு திருவிழா நடந்தது.

101

ஒரு இடத்தில் இறக்கி வைக்கப்படும் சிலைகளின் முன்னால் வரும் கோயில் பூசாரிகள் சாமியாட, கை கோர்த்து வரிசையில் நின்ற பக்தர்கள் பூசாரிகளைப் பிடித்து தூக்கிச் செல்லும் நிகழ்வு புதுமையாக இருந்தது. தொடர்ந்து பொங்கல் விழாவும், கிடாய் வெட்டு பூஜையும் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளில் மாங்காடு கிராமத்தினர் மட்டுமின்றி, பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பாதாள அய்யனார் பக்தர்களும் வந்து கலந்து கொள்கின்றனர்.

Devotees pudukkottai TEMPLE FESTICAL
இதையும் படியுங்கள்
Subscribe