தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய தமிழக முதல்வரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வரிடம் பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் .பின்னர் இது தொடர்பாக ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசியவர் அவர், ''முதல்வர் நன்றாகவே இருக்கிறார். மருத்துவர்களிடமும் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைவார். குணமடைய வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்' என்ற வார்த்தையை முதல்வரிடம் நீங்கள் சொன்னதாகக் கூறப்படுகிறதே' என்ற கேள்விக்கு, ''நான் சொல்லவில்லை. நீ தான் சொல்கிறாய்'' என்றார்.
'கூட்டணி மாற்றம் இருக்குமா?' என்ற செய்தியாளர் கேள்விக்கு, ''ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. அதுவும் அவர் தமிழக முதல்வர். விரைவில் குணமாக என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பது என்பது ஒரு வழக்கம். அதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமே இல்லை''என்றார்.
'நேற்று தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் பாமகவின் தலைமையகம் என்பது அன்புமணி இயங்கும் திலக்தெரு என குறிப்பிடப்பட்டுள்ளது' என்ற கேள்விக்கு, ''ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி. அதுபோல நான் இருக்கும் இடம் தான் பாட்டாளி மக்கள் கட்சி. தைலாபுரம் தோட்டம் தான் பாட்டாளி மக்கள் கட்சி புரிந்து கொண்டீர்களா? 17ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக் குழுவிற்கு யார் வரவேண்டும் என்பதைக் கட்சி தீர்மானிக்கும். அவர்களுக்கு அழைப்பு போகும்'' என்றார்.