திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் வீட்டுக்குள் வைத்து நாட்டு வெடிகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருநின்றவூரைச் சார்ந்த யாசின் என்பவர் தன்னுடைய நண்பருடன் பட்டாசு வாங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். அப்பொழுது விற்பனை நடந்து கொண்டிருந்த வீட்டிற்குள் திடீரென உள்ளே இருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் பட்டாசு வாங்க வந்த இருவர், வீட்டில் இருந்த இருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர்.
வீட்டுக்குள் இருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதால் அந்த பகுதியில் பயங்கர சத்தம் ஏற்பட்டது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்திருக்கிறது. அதேபோல் இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், ''மொத்தமாக இருந்தது நான்கு பேர் இறந்துள்ளனர். இரண்டு பேர் வாங்க வந்தவர்கள். இரண்டு பேர் உள்ளே இருந்தார்கள். பட்டாசுகள் எங்கிருந்து கொண்டு வந்து இங்கு விற்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இறந்தவர் இறுதி ஊர்வலத்தில் வெடி வைப்பவர் தான். அதனால் இது குறித்து விசாரிக்க வேண்டும்'' என்றார்.