ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். சிவராத்திரியை முன்னிட்டு குல தெய்வ வழிபாட்டை முடித்துவிட்டு, தனது குடும்பத்துடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, வரும் வழியில் மெய்யம்புலி பகுதியில் உள்ள பட்டதாரி எனும் பிரியாணி கடைக்கு குடும்பத்துடன் உணவருந்தச் சென்றார். அவர்கள், பிரியாணி மற்றும் சிக்கன் 65 வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பிரியாணியில் புழுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

இதையடுத்து அந்த பிரியாணி சாப்பிட்ட கண்ணனின் மனைவி மற்றும் 3 வயதுக் குழந்தைக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கடைக்குச் சென்று கடையின் உரிமையாளரிடம் நடந்த சம்பவம் பற்றிப் பேச வேண்டும் எனக் கூறி உரிமையாளரின் போன் நம்பரைக் ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் ஊழியர்கள் போன் நம்பரைத் தர மறுத்ததால், கடையைப் பூட்டிய கண்ணன் சாவியை தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

Advertisment

மேலும், நடந்த சம்பவம் குறித்தும் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர், கடை உரிமையாளரை காவல் நிலையத்திற்கு அழைத்து சாவியைக் கொடுத்து, உணவு பாதுகாப்புத்துறையினர் வந்து உணவைச் சோதனை செய்யும் வரை கடையைத் திறக்கக்கூடாது என அறிவுறுத்தினர். இதையடுத்து பட்டதாரி பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தியதில் சுமார் ஆறு கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டதாரி பிரியாணி கடை, ராமேஸ்வரம் பகுதியில் மெய்யம்புலி, தங்கச்சிமடம், வர்த்தகத் தெரு உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.