ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இத்தொடர், நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 8 அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
இதில், புள்ளிப்பட்டியலில், ஆஸ்திரேலியா அணி முதல் இடத்திலும், இந்தியா அணி 4வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 7வது இடத்திலும் உள்ளது. இந்த தொடரின் 26வது போட்டியானது மத்தியப் பிரதேசம், ஹோல்கர் மைதானத்தில் இன்று (25-10-25) நடைபெற்றது. தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற இந்த போட்டியில், 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணியை ஆஸ்திரேலியா மகளிர் அணி தோற்கடித்துள்ளது.
இந்த நிலையில், இந்தூரில் இரண்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி உலகக் கோப்பை போட்டிக்காக இந்தியா வந்திருக்கும் ஆஸ்திரேலியா வீராங்கனைகள், இன்று ஒரு ஓட்டலுக்கு நடந்து சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், அவர்களை பின் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சம்பவம் குறித்து உடனடியாக போலீசார் விசாரணை நடத்தி குற்றச் செயலில் ஈடுபட்ட அகீல் என்ற நபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா கூறுகையில், இது நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்திய மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் குற்றம் சாட்டப்பட்டவரை சட்டம் அதன் போக்கில் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/25/aus-2025-10-25-18-39-01.jpg)