ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 இந்தியாவில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இத்தொடர், அக்டோபர் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 8 அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். இந்தத் தொடரின் 20வது போட்டி மத்தியப் பிரதேசம், இந்தூர் நகரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற்றது. தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில், 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணியை ஆஸ்திரேலிய மகளிர் அணி தோற்கடித்தது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக, இந்தூரில் இரண்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஐசிசி உலகக்கோப்பைப் போட்டிக்காக இந்தியா வந்திருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு இரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் அவர்களைப் பின் தொடர்ந்து, ஆபாசமாகப் பேசியும், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டும் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து இந்தூர் விஜயநகர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு, சிசிடிவி காட்சிகள் மற்றும் புகாரின் அடிப்படையில் குற்றச்செயலில் ஈடுபட்ட அகீல் அகமது (29) என்ற நபரை அடையாளம் கண்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்காக இந்தியா வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு ஒரு நபர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், ஐசிசியும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பாலியல் தொல்லைக்கு ஆளான ஆஸ்திரேலிய வீராங்கனைகள் மீது தவறு இருப்பதாகக் கூறி, மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா சர்ச்சையாகப் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது: “நாங்கள் வெளியே செல்லும் போதெல்லாம், குறைந்தபட்சம் ஒரு உள்ளூர் நபரிடமாவது தெரிவிப்போம். கிரிக்கெட் வீரர்கள் மீது மிகுந்த மோகம் இருப்பதால், புறப்படுவதற்கு முன்பு எங்கள் பாதுகாப்பு அல்லது உள்ளூர் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இது எதிர்காலத்தில் வீரர்களுக்கு நினைவூட்டும் என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்தில் கால்பந்தைப் போன்று இந்தியாவில் கிரிக்கெட். கால்பந்து வீரர்களின் உடைகள் கிழிக்கப்படுவதை நான் பார்த்துள்ளேன்.
நாங்கள் ஒரு ஹோட்டலில் தங்கி காபி குடித்துக் கொண்டிருந்தோம். பல இளைஞர்கள் வந்தார்கள், யாரோ ஒரு பிரபல வீரரிடம் ஆட்டோகிராஃப் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண் அவரை முத்தமிட்டார், அவரது உடைகள் கிழிந்தன. அவர் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர். சில நேரங்களில், வீரர்கள் தங்கள் பிரபலத்தை உணர மாட்டார்கள். வீரர்கள் மிகவும் பிரபலமானவர்கள், எனவே அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீராங்கனைகளுக்கு நடந்த இந்தச் சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடம். நமக்கு மட்டுமின்றி வீராங்கனைகளுக்கும் ஒரு பாடம்” என்று கூறியுள்ளார்.
பாஜக அமைச்சரின் கருத்து, வீராங்கனைகள் மீது பழி சுமத்துவதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்களையே குறை கூறுவது போல் இருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
“இச்சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் சட்டம்-ஒழுங்கு முறையின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. அமைச்சர் பாதிக்கப்பட்டவர்களைப் பழி சுமத்துவதன் மூலம் பாஜக ஆட்சியின் மனோபாவத்தை வெளிப்படுத்துகிறார்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அருன் யாதவ் தெரிவித்திருக்கிறார். அதேபோன்று “ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் அவர்கள் மீது பழி சுமத்துவது இந்தியாவிற்கு அவமானம்” என்று சமாஜ்வாதி கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
ஐசிசி மகளிர் உலகக்கோப்பைக்காக இந்தியாவிற்கு விளையாட வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் அத்துமீறல்கள் நடந்திருப்பதும், பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சுமத்தும் வகையில் பாஜக அமைச்சர் பேசியிருப்பதும் உலக அரங்கில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/27/untitled-1-2025-10-27-18-22-03.jpg)